கோவை: மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் முதல் 5 துணி வகைகளுக்கும், ஆகஸ்ட் மாதம் முதல் எட்டு வகை துணிகளுக்கும் கூடுதல் இறக்குமதி வரி விதித்தது மேலும் ஹூசைரி நூலின் ஏற்றுமதி வங்கதேசத்துக்கு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த மாற்றங்கள் சிரமத்தில் உள்ள நூற்பாலைத்துறை நெருக்கடியில் இருந்து மீண்டு வர உதவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ஜவுளித்தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் உள்நாட்டு விற்பனை தேக்கமடைந்துள்ளதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனா-வின் ஜவுளி பொருட்கள் உலகம் முழுவதும் குறைந்த விலையில் குவிய தொடங்கியது. இது இந்திய ஜவுளித்தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழக ஜவுளித்தொழில்துறையினர் அதிகம் பாதிக்கப்பட்டனர்.