*பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு
பாப்பாக்குடி : முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் மின் தகன மேடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம், முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் மூன்று நதிகள் சங்கமிக்கும் முக்கூடல் தாமிரபரணி ஆற்றிலிருந்து நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்பட 5 மாவட்டங்களில் உள்ள சுமார் பல ஆயிரம் கிராமங்களுக்கு மேல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் மின் தகன மேடை அமைப்பது தொடர்பாக பேரூராட்சி சார்பாக பேரூராட்சி மண்டபத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனைத்து சமுதாய மக்களிடமும் கருத்து கேட்பு நடைபெற்றது. அப்போது அனைத்து சமுதாய மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் எந்த தீர்மானமும் எடுக்காமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தாமிரபரணி ஆற்று தண்ணீர் மாசு அடைய வாய்ப்பு உள்ளதால், இப்பகுதியில் மின் தகன மேடை அமைக்கக்கூடாது என ஊர் பொதுமக்கள் மற்றும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று முன்தினம் முக்கூடல் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்க வந்தனர்.
ஆனால் முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் இல்லாத காரணத்தினால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அலுவலக வாசலிலேயே காத்திருந்தனர். பின்னர் தாமதமாக வந்த செயல் அலுவலரிடம் மனு வழங்கினர்.
இதுகுறித்து தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் கூறுகையில், ‘முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் எவ்வித மின் தகன மையமும் அமைக்க கூடாது. அவ்வாறு அமைத்தால் ஆறு மிகவும் பாதிக்கப்படும்.
நீர்நிலைகளில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலை நெல்லை மாவட்டத்திற்கு ஏற்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என்றனர். மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
The post முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் மின்தகன மேடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.