வாஷிங்டன்: அமெரிக்க அரசின் வரி மற்றும் செலவு மசோதா காரணமாக அதிபர் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் விரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டனர். முக்கியமாக டிரம்ப் அரசு கொண்டு வந்துள்ள ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ எனப்படும் வரிக்குறைப்பு மசோதாவை மஸ்க் விமர்சித்தார். இதனால் அவரது நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து, சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் மஸ்க் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார். அவருடன் பேச முடியாது என்றார். இவர்களது மோதல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிரம்ப் குறித்து, தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், ‘கடந்த வாரம் டிரம்ப் குறித்து எனது சில பதிவுகள் அளவு மீறி சென்றுவிட்டன. அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்றார். இந்த மன்னிப்பை ஏற்று கொண்ட டிரம்ப், ‘அவர் மன்னிப்பு கேட்டது மிகவும் நல்ல விஷயம்’ என்றார்.
The post முடிவுக்கு வந்த மோதல்; எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றார் டிரம்ப் appeared first on Dinakaran.