சென்னை: வனத்துறை சார்பில் தீயணைப்பு வீரர்களுக்கு பாம்புகளை பிடிக்க பயிற்சியும், முதன்முறையாக பிரத்யேக உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் பாம்பு கடியால் 50 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இந்த இறப்புகள், நாகப்பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன் மற்றும் கண்ணாடி விரியன் ஆகிய நஞ்சு இன பாம்புகளால் ஏற்படுகிறது. இயற்கை வாழ்விடங்களை ஒட்டி மனித குடியிருப்புகள் இருப்பதால், மனித – பாம்பு மோதல்கள் தமிழகத்தில் பொதுவாக காணப்படுகிறது. வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்துவிடும் சூழல்களில், அதை பிடிக்க தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மனித – பாம்பு மோதல்களை தணிப்பதில் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்கள் பாம்புகளை பாதுகாப்பாக மீட்க, முறையான பயிற்சி அவசியமாகிறது.