சென்னை: “முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.பி. என்ற முறையில் முதல்வர் குறித்தோ அல்லது அரசைப் பற்றியோ விமர்சிக்கும்போது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்” என அதிமுக எம்.பி, சி.வி.சண்முகத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், தமிழக அரசு குறித்தும், தமிழக முதல்வர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர். இதேபோல சி.வி.சண்முகத்துக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.