பெரம்பூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 73 நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், கொளத்தூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜிகேஎம் காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
தலைமை செயற்குழு உறுப்பினர் மகேஷ் குமார் தலைமை வகித்தார். அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக அப்போலோ மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் ப்ரீத்தா ரெட்டி கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். கண், பல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் வந்து பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தனர். அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து மருத்துவ முகாமை நடத்தினர்.
ஏராளமான பொதுமக்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று பயன்பெற்றனர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் மருத்துவர்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் சந்துரு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
The post முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.