சென்னை: மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக முதல்வர் மருந்தகங்கள் 1000 இடங்களில் துவக்க தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தொழில்முனைவோர்களிடமிருந்து 638 விண்ணப்பங்களும் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து 490 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 1128 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. பரிசீலணை செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1.50 இலட்சம் (ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) முதற்கட்ட அரசு மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகம் விண்ணப்பித்துள்ள தகுதியான தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இன்று 22.01.2025 தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மருந்தாளுனர்களுக்கு மருந்து இருப்பு பராமரிப்பு, விற்பனை செய்யும் முறை, சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் மென்பொருள் பயன்பாடு குறித்து மென்பொருள் வல்லுனர், மருந்து கட்டுப்பாட்டு துறை மற்றும் மருத்துவ சேவைக் கழகத்தின் வல்லுனர்கள் மூலம் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் காணொளிக்காட்சி கூட்ட அரங்கில் பயிற்சி வழங்கப்பட்டது. முதல்வர் மருந்தகம் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.
மேலும், கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் மருந்தகங்களுக்கு நேரடியாக சென்று களப்பயிற்சி வழங்கப்படும். பின்னர், விண்ணப்பித்த தகுதியான தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்க மருந்தாளுனர்களுக்கும் சென்னையில் நேரடியாக பயிற்சி வழங்கப்படும். முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கான பணிகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்பார்வையிட அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் பதிவாளர் நிலையில் மாமண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைத்து முதல்வர் மருந்தக கடைகள் மற்றும் மாவட்ட சேமிப்புக் கிடங்குகளை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி விரைவில் முதல்வர் மருந்தகம் துவங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர்.என்.சுப்பையன், தெரிவித்துள்ளார்.
The post முதல்வர் மருந்தகம் விண்ணப்பித்துள்ள தகுதியான தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி appeared first on Dinakaran.