திருச்சி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு செய்து பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் இரண்டு நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார். இன்று (8ம்தேதி) காலை 10.40 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
11 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து காரில் சாலை மார்க்கமாக திருவெறும்பூர் துவாக்குடி செல்கிறார். பிற்பகல் 12 மணியளவில் துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்கு செல்லும் முதல்வர், அங்கு அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரிப்பள்ளி மற்றும் விடுதியை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு மாதிரிப்பள்ளிகளின் பயணம் காணொலியை கண்டு ரசிக்கும் முதல்வர், அரங்கில் அமர்ந்துள்ள பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்படும் முதல்வர், டிவிஎஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகைக்கு வந்து ஓய்வெடுக்கிறார். மாலை 5 மணியளவில் புத்தூர், பெரியார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் திருவுருச்சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற உள்ள கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார். நாளை (9ம்தேதி) காலை திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலையை திறந்து வைத்து, தந்தை பெரியார் காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து, அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தில் நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவசிலையை திறந்து வைக்கிறார். பின்னர் பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைக்க உள்ளார். பின்னர் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து பார்வையிட உள்ளார்.
பின்னர் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நிறைவுற்ற திட்ட பணிகளை திறந்துவைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா சிறப்புரையாற்ற உள்ளார். பின்னர் மாலை இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்கும் முதல்வர், இரவு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
* இன்றும், நாளையும் முதல்வர் ரோடு ஷோ
டிவிஎஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வர், இன்று (8ம்தேதி) மாலை சுற்றுலா மாளிகையில் இருந்து டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை, நீதிமன்றம், அரசு மருத்துவமனை, புத்தூர் 4 ரோடு, தென்னூர், தில்லைநகர், சாலை ரோடு, கரூர் பைபாஸ் ரோடு, கலைஞர் அறிவாலயம் வரை 5 கி.மீ தூரம் ரோடு ஷோ நடத்த உள்ளார். இதே போல் நாளை (9ம்தேதி) காலை கிராப்பட்டி போலீஸ் பட்டாலியன் மைதானம் அருகே இருந்து கிராப்பட்டி எ.புதூர் வழியாக பஞ்சப்பூர் பசுமை பூங்கா வரை 3 கி.மீ தொலைவுக்கு ரோடு ேஷா நடத்த உள்ளார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்: ரூ.408 கோடியில் பஞ்சப்பூரில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.