* 21 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகளின் பிரமாண்ட கலைநிகழ்ச்சி
சென்னை: நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். 21 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனை ஏராளமான மக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர். தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பங்கேற்பதற்காக காலை 7.52 மணிக்கு காவல்துறை வாகன அணிவகுப்புடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையாளர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி நிகழ்ச்சி இடத்திற்கு வந்தடைந்தார். அவரை தலைமைச்செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். இதனையடுத்து, ராணுவத்தினரின் வாகன அணிவகுப்புடன் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து, ஆளுநருக்கு முப்படை தலைமை அதிகாரிகளான தென்னிந்திய பகுதிகளின் தலைமை படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் எம்.ஷெனாய், வான்படை தலைமை அதிகாரி குரூப் கேப்டன் கே.எம்.ரகுராமன், கடலோர காவல் படை கமாண்டர் டி.எஸ் சைனி, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
இதனையடுத்து சரியாக காலை 8 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். அப்போது ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. இதன் பின்னர், ராணுவப்படை, கடற்படைப்பிரிவு உள்ளிட்ட 43 வகையான படை பிரிவுகள் அணிவகுத்து வந்தன. இதன் மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர், வீர தீரச் செயலுக்காக சென்னை மாவட்டம் முன்னணி தீயணைப்பு வீரர் வெற்றிவேலுவுக்கு அண்ணா பதக்கம் மற்றும் ரூ.1 லட்சம் காசோலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதேபோல், வேளாண்மை துறை சிறப்பு விருதும், நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதும் ரூ.5 லட்சத்திற்கான காசோலை தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தை சேர்ந்த முருகவேலுவுக்கும் வழங்கப்பட்டது. இதனையடுத்து, காந்தியடிகள் காவலர் பதக்கம் விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் சின்ன காமணனுக்கும், விழுப்புரம் தாலுக்கா சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய தலைமை காவலர் மகா மார்க்ஸ்க்கும், திருச்சி மாவட்டம் துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு தலைமை காவலர் கார்த்திக், சேலம் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் சிவா, சேலம் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பூமாலை ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
அதேபோல், சிறந்த காவல் நிலையத்திற்கான முதல்வர் விருது முதல் பரிசு மதுரை மாவட்டம் சி-3 எஸ்எஸ் காலனி காவல் ஆய்வாளர் காசியும், இரண்டாம் பரிசு திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உதயகுமார் மற்றும் மூன்றாம் பரிசு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் மதியரசன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோப்பைகளை பெற்றுக் கொண்டனர். இதனைதொடர்ந்து, 6 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ – மாணவியர்களின் கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
இதன்பின்னர், முதன் முதலாக அலங்கார ஊர்தி அணிவகுப்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க வாகன அணி வகுப்பு தொடங்கியது. இதில், காவல்துறை, விளையாட்டுத்துறை உள்ளிட்ட 21 அலங்கார ஊர்தியில் அரசின் சாதனைகள் விளக்கப்பட்டிருந்தன.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், கவர்னர் ஆர்.என்.ரவியின் மனைவி லட்சுமி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இறுதியாக தலைமைச்செயலர் முருகானந்தம் அணிவகுப்பு தளவாய் விங் கமாண்டர் சர்தாக் புதியாவை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து நாட்டுப்பண் இசைக்கப்பட்டு ஆளுநர் மற்றும் முதல்வர் காலை 9.18 மணியளவில் விடைபெற்றுக் கொண்டனர்.
* கோட்டை அமீர் விருதுக்கு ரூ.5 லட்சம்
கடந்த 2001ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்து வரும் ஒரு நபருக்கு குடியரசு தின விழாவில் முதல்வரால் கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறக்கூடிய நபருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத நல்லிணக்க பதக்கத்திற்காக வழங்கப்படும் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அந்தவகையில், இந்தாண்டுக்கான மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது ராமநாதபுரம் மாவட்டம், வெளிபட்டினத்தை சேர்ந்த எஸ்ஏ.அமீர் அம்சாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், அரசின் அறிவிப்பின் படி, பரிசு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
* 5 அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தினத்தையொட்டி காமராஜர் சாலை முதல் வாலாஜா சாலை வரை 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது. மேலும், காவல் இணை ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் குடியரசு தின விழா ஆளுநர் மூவர்ண கொடியை ஏற்றினார்: ஏராளமான மக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர் appeared first on Dinakaran.