சென்னை: முதல் தகவல் அறிக்கையை உடனடியாக காவல்துறை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கைகள் எடுக்க காவல் நிலைய அதிகாரிகளுக்கு உரிய உத்தரவிட வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கடிதம் எழுதியுள்ளார். பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்ற முதல் தகவல் அறிக்கைகள் உடனடியாக காவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. இதனால் குற்றம் சட்டப்பட்டவர்கள், அவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி முறையிட்டார்.
அவர் கூறும்போது, உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் காவல்துறை பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையை உடனடியாக காவல்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உடனடியாக முதல் தகவல் அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரினார். இதைக்கேட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், சென்னை காவல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல் தகவல் அறிக்கைகள் குறித்த காலத்திற்குள் காவல் நிலையங்களில் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. இது தொடர்பாக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தொடர்ந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலைய அதிகாரிகளுக்கு முதல் தகவல் அறிக்கையை விரைந்து காவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
The post முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன் காவல்துறை இணையதளத்தில் உடனே பதிவேற்ற வேண்டும்: போலீஸ் கமிஷனருக்கு அமர்வு நீதிமன்றம் கடிதம் appeared first on Dinakaran.