வாஷிங்டன்: பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் நாளில் வெளியிட்ட அறிவிப்பால், அமெரிக்காவில் வாழும் 10 லட்சம் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். அதிபராக பதவியேற்ற உடன் முதல் நாளிலேயே பல அதிரடியான அறிவிப்புகளை அதிபர் டிரம்ப் வெளியிட்டார். தனது ஓவல் அலுவலகத்தில் 26 முக்கிய நிர்வாக உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார்.
இதில், பல உத்தரவுகள் முந்தைய அமெரிக்க அரசுகள் கடைபிடித்த கொள்கைகளில் இருந்து முற்றிலும் விலகும் வகையில் உள்ளன. அந்த வகையில், பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை வழங்கும் மிகப்பழமையான திட்டத்தை டிரம்ப் ரத்து செய்திருப்பது அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அந்நாட்டு மண்ணில் பிறந்த குழந்தைக்கு தாமாக குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான சட்டம் 1868ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. தற்போது இதை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் டிரம்ப். அவர் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை குடியுரிமை பெற, குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அமெரிக்க குடிமகனாக, சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராக (கிரீன் கார்டு வைத்திருப்பவர்) அல்லது அமெரிக்க ராணுவத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை தவிர்த்து, தந்தை அமெரிக்க குடிமகனாக இல்லாவிட்டாலோ, சட்டப்பூர்வமான நிரந்தர குடியுரிமை இல்லாதவர் என்றாலோ அல்லது தாய் சட்டவிரோதமாக குடியேறியவர் அல்லது மாணவர், சுற்றுலா விசாவில் வந்திருப்பவர் என எப்படி இருந்தாலும் அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு தாமாக குடியுரிமை கிடைக்காது என்பது டிரம்ப் அரசின் புதிய கொள்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எச்1பி விசா போன்ற சட்டப்பூர்வ குடியேற்றம் கொண்டவர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிரம்பின் இந்த உத்தரவு அடுத்த 30 நாளில் அமலுக்கு வரும். அதன்பிறகு, எச்1பி விசாவில் அமெரிக்கா சென்றுள்ள இந்தியர்கள் மற்றும் கிரீன்கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தாமாக குடியுரிமை கிடைக்காது. தற்போது நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டுக்காக 10 லட்சம் இந்தியர்கள் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு இந்த கொள்கை மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்களே அதிகளவில் எச்1பி விசா பெற்று அமெரிக்காவில் தங்கி பணியாற்றி வருகின்றனர். கிரீன்கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களும் பெரும்பாலானவர்கள் இந்தியர்களும், சீனர்களுமாக உள்ளனர்.
பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்குவது கேலிக்குரியது என ஏற்கனவே டிரம்ப் கூறியிருந்தார். இதன் மூலம் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதன் மூலம் குறுக்கு வழியில் அமெரிக்க குடிமகனாகி விடுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், டிரம்பின் இந்த நிர்வாக உத்தரவு பல்வேறு சட்ட வழக்குகளை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு மாற்றமாக பிற கரன்சிகளை வர்த்தகத்திற்கு பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால், அந்நாடுகளுக்கு 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
* பதவி ஏற்கும் முன்பே விலகிய விவேக் ராமசாமி
அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசின் செயல்திறன் ஆலோசனைக் குழுவில் தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியினரான விவேக் ராமசாமி ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டது. ஆனால் இப்பதவியை ஏற்கும் முன்பாகவே விவேக் ராமசாமி விலகுவதாக நேற்று அறிவித்தார். ஒஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே அரசின் செலவினத்தை குறைக்க பரிந்துரைகள் வழங்கும் செயல்திறன் குழுவில் இனி மஸ்க் மட்டுமே செயல்படுவார்.
* இப்படியும் சில…
அமெரிக்காவுக்கே முன்னுரிமை என முழங்கிய டிரம்ப், மெக்சிகோ வளைகுடா என்பதை அமெரிக்கா வளைகுடா என பெயர் மாற்ற வேண்டுமெனவும், வட அமெரிக்காவின் உயரமான மலையான டேனலியை மவுண்ட் மெக்கென்லே என முன்னாள் அமெரிக்க அதிபர் பெயர் சூட்டப் போவதாகவும் அறிவித்துள்ளார். மெக்கென்லே மலை என இருந்த பெயரை முன்னாள் அதிபர் ஒபாமா டேனலி என மாற்றியது குறிப்பிடத்தக்கது.
* 1,500 பேருக்கு பொது மன்னிப்பு
கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தனது ஆதரவாளர்கள் சுமார் 1,500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக டிரம்ப் அறிவித்தார். கடந்த 2020 அதிபர் தேர்தலில் டிரம்ப் தனது தோல்வியை ஏற்காததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்து வன்முறை வெறியாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தடாலடி அறிவிப்புகள்
* அமெரிக்க விசா விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி கடுமையாக்கப்பட வேண்டும். எந்தவொரு நாடும், தனிநபரும் அமெரிக்காவின் தேச நலன், கலாச்சாரம், பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பது விசா வழங்குவதிலேயே உறுதி செய்யப்பட வேண்டும் என்கிற உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
* மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதை தடுக்க தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை டிரம்ப் பிரகடனப்படுத்தி உள்ளார். இதற்காக தெற்கு எல்லையில் ராணுவத்தை குவிக்க நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். தனது முதல் ஆட்சிக் காலத்தில் எல்லை முழுவதிலும் மதில் சுவர் கட்ட டிரம்ப் உத்தரவிட்டார். அதில் பல இடங்களில் பணிகள் முடிக்கப்படவில்லை. தற்போது மீண்டும் எல்லை சுவர் கட்டும் பணியை தொடங்கி முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
* சீனாவுக்கு சொந்தமான சமூக ஊடக தளமான டிக்டாக்கை தடைசெய்யும் சட்டம் செயல்படுத்தப்படுவதை 75 நாட்களுக்கு நிறுத்திவைக்கும் உத்தரவு ஒன்றிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
* கருத்து சுதந்திரத்தை மீண்டும் வழங்கும் வகையில் அரசு தணிக்கை தடுக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
* போதைப்பொருள், மனித கடத்தல் கும்பல்கள் மற்றும் சர்வதேச சட்டவிரோத கும்பல்களையும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
* கனடா மீதான 25 சதவீத வரி விதிப்பை வரும் பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைக்கும் உத்தரவு கையெழுத்தானது.
* அமெரிக்காவில் ஆண், பெண் ஆகிய இரு பாலினங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் என்கிற உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் 3ம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை அவர் வாபஸ் பெற்றுள்ளார். முன்னாள் அதிபர் பைடன் கையெழுத்திட்ட 3ம் பாலினத்தை சேர்ந்த ராணுவத்தினர் பாதுகாப்புகளையும் டிரம்ப் ரத்து செய்தார். தற்போது அமெரிக்க ராணுவத்தில் 9,000 முதல் 14,000 3ம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
* முன்னாள் அதிபர் பைடன் மரண தண்டனைக்கு எதிராக இருந்த நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மீண்டும் மரண தண்டனை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். டிரம்ப்பின்
முந்தைய ஆட்சியில் 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
* உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகல்
கொரோனா காலகட்டத்திலேயே உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்த டிரம்ப், அந்த அமைப்புக்கு நிதி வழங்குவதை தவிர்க்க அப்போதே விலகுவதற்கான நடவடிக்கையை தொடங்கினார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் அந்த முடிவை அடுத்து வந்த அதிபர் பைடன் நிராகரித்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் பதவிக்கு வந்த டிரம்ப் முதல் நாளிலேயே உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி தந்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பிற்கு அதிக நிதி வழங்குவது அமெரிக்கா என்பதால் அந்நாடு விலகியதால் இனி அந்த அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதே போல, பாரிஸ் பருவகால ஒப்பந்தத்தில் இருந்து மீண்டும் அமெரிக்கா விலகுவதாக தெரிவித்துள்ளார். தனது முதல் ஆட்சியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக டிரம்ப் அறிவித்த நிலையில், அடுத்ததாக பதவியேற்ற பைடன் ஒப்பந்தத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
* பைடனின் 78 உத்தரவுகளை ரத்து செய்தார் டிரம்ப்
பதவியேற்ற முதல் நாளில் தனது ஓவல் அலுவலகத்தில் 26 முக்கிய நிர்வாக ஒப்பந்தங்களில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதில், முந்தைய அதிபர் பைடன் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 78 நிர்வாக உத்தரவுகளை டிரம்ப் ரத்து செய்தார். அமெரிக்க அரசாங்கத்தில் நிர்வாக உத்தரவு என்பது, புதிய அதிபர் தனது அரசை எவ்வாறு நிர்வகிக்க விரும்புகிறார் என்பதை பற்றிய கையொப்பமிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை.
இது நாடாளுமன்றத்தின் தலையீடு இல்லாமல், அதிபர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தும் ஒரு வழியாகும். எம்பிக்களால் நேரடியாக இவற்றை ரத்து செய்ய முடியாது. ஆனால், நாடாளுமன்றம் மூலமாக நிர்வாக உத்தரவுகளை செயல்படுத்த விடாமல் தடுக்க முடியும். அல்லது தடைகளை ஏற்படுத்தலாம்.
* உஷா வான்சை புகழ்ந்த டிரம்ப்
துணை அதிபராக பதவியேற்ற ஜேடி வான்சின் மனைவி உஷா வான்ஸ். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட உஷா சிலுகுரியின் பெற்றோர், 1970களில் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தனர். அங்கேயே பிறந்து வளர்ந்து, இந்து மதத்தைப் பின்பற்றிய உஷா சிலுகுரி, 2013ம் ஆண்டு யேல் சட்டப்பள்ளியில் படிக்கும் போது, ஜேடி வான்சை காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இவான், விவேக் என்ற இரண்டு மகன்களும், மிராபெல் என்ற மகளும் உள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் டிசியில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார் உஷா வான்ஸ். இந்த நிலையில், பதவியேற்பு விழாவில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ‘‘ஜேடி வான்சை நீண்ட காலமாக நான் கவனித்து வருகிறேன். அவர் மிகச்சிறந்த செனட்டர், மிகச்சிறந்த புத்திசாலி. அவரை விட அவரது மனைவி மிகப்பெரிய புத்திசாலி. அவர் அரசியலில் இருந்திருந்தால், துணை அதிபர் பதவிக்கு எனது தேர்வு உஷாவாக இருந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை’’ என்றார்.
The post முதல் நாளில் அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை ரத்து: 10 லட்சம் இந்தியர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.