ஊட்டி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அரசு முறை பயணமாக வந்தார். ஊட்டி தமிழ்நாடு மாளிகையில் தங்கிய அவர், நேற்று மாலை 4 மணியளவில் கல்லட்டி மலைப்பாதை வழியாக முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சென்றார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாச ராவ் ரெட்டி, முதன்மை உயிரின வனப்பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் தெப்பக்காடு முகாமில், வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு மற்றும் உணவளித்தார். தொடர்ந்து 44 பாகன்களுக்கு ரூ.5.6 கோடி மதிப்பீட்டிலான குடியிருப்புகளை திறந்து, பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார். ஆலமரக்கன்றை அங்கு நட்டார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வனத்துறை அதிகாரிகளுக்கு 30 புதிய வாகனங்களை வழங்கினார். கோவை மாவட்டத்தில் கரடுமுரடான பாதைகளில் பயணிக்க வசதியாக நவீன வசதிகளுடன் கூடிய இரு ஜீப் வாகனங்களை வழங்கினார். பழங்குடியின மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் பாகன்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் தொடர்பான ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளி தம்பதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பாராட்டினார். அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதுமலை புலிகள் காப்பகம் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். நான் முதுமலைக்கு பலமுறை வந்துள்ளேன். தற்போது நீலகிரியில் ரம்யமான காலநிலை நிலவுகிறது’’ என்றார்.
The post முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு, உணவளித்த முதல்வர் ஸ்டாலின்: ஆஸ்கர் தம்பதிக்கு பரிசு appeared first on Dinakaran.