இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதியன்றம் உத்தரவிட்டது. இம்ரான் கான் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியை கடந்த 1996ம் ஆண்டு தொடங்கினார். 2018ம் ஆண்டு முதல் முறையாக ஆட்சியை பிடித்து பிரதமரானார். தற்போது அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் பிரிட்டனிலிருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை, இம்ரான்கானுக்கு சொந்தமான ஆல்-கதிர் அறக்கட்டளையில் வரவு வைத்துள்ளனர்.
அதற்கு பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாகவும் இம்ரான் கான் மீது கடந்த 2023 ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து பாகிஸ்தான் ஊழல் தடுப்பு துறை வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்து, ஏற்கனவே இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கான தண்டனை விவரங்களை பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனையோடு இம்ரான் கானுக்கு ரூ.10 லட்சம் மற்றும் புஸ்ரா பீவிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால் இம்ரான் கானுக்கு கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும், புஸ்ரா பீவிக்கு 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை: பாகிஸ்தான் நீதியன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.