“நான் சொல்வதை கலெக்டர், எஸ்பி கேட்க வேண்டும். நான் சொல்வதைத்தான் அனைத்து நிர்வாகங்களும் கேட்க வேண்டும். இங்கே கேம் ஆட இடம் கிடையாது. ஆடினால் அவன் கதை முடிந்தது” – திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் (பொறுப்பு) தர்மச்செல்வன் பேசிய இந்த தாம் தூம் பேச்சு வைரலாகி, திமுக தலைமைக்கு தர்சங்கடத்தை உண்டாக்கி இருக்கிறது. திமுக மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் குறுநில மன்னர்களைப் போல் செயல்படுவதாக அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிக்கட்சிகள் வரிந்துகட்டியுள்ளன. 27-ம் தேதி தருமபுரியில் கிழக்கு மாவட்ட திமுக-வின் செயற்குழு கூட்டம் நடந்தது.
சுமார் 25 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் தான் தர்மச் செல்வன் இப்படிப் பேசி இருக்கிறார். முன்னாள் மாவட்ட பொறுப்பாளரான பி.என்.பி.இன்பசேகரனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படாத ஆதங்கத்தில் அவரது ஆதரவாளர்களே இந்த வீடியோவை வைரலாக்கி இருக்கிறார்கள் என்றும், கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட தடங்கம் சுப்பிரமணியின் ஆதரவாளர்கள் தான் இதை பரப்பி இருக்கிறார்கள் என்றும் திமுக வட்டாரத்தில் பலவாறாக பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், தர்மச்செல்வனை அவசரமாக சென்னைக்கு அழைத்து விளக்கம் கேட்டு ‘புத்தி சொல்லி’ அனுப்பி இருக்கிறது திமுக தலைமை.