திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் மற்றும் கோ-ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடந்தது. கலெக்டர பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராமபிரதீபன், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஜோதி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். அப்போது, தீபத்திருவிழாவுக்காக துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், தீபத்திருவிழா தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும், நகரின் முக்கிய இடங்கள் மற்றும் கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், நடைபாதைக் கடைகளை முறைப்படுத்துதல், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய குழுக்கள் அமைத்தல், மலையேறும் பக்தர்களுக்கு 2500 நுழைவுச் சீட்டுகள் வழங்க தேவையான வழிமுறைகள், கட்டுப்பாட்டு அறை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பாதுகாப்பு பணியில் 14 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளதாகவும், 700 சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும், 85 இடங்களில் காவல் உதவி மையங்கள், 20 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், 25 தற்காலிக பஸ் நிலையங்கள், 3408 சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. ஆட்டோ கட்டணங்களை முறைபபடுத்தவும், கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆட்டோக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டனர். அதற்காக 20 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல், 3 சிறப்பு மருத்துவ முகாம்கள், 85 நடமாடும் மருத்துவ முகாம்கள், 25 அவசரகால வாகனங்கள், 15 இருச்சக்கர அவசரகால வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும் என மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கிரிவலப்பாதை உள்ளிட்ட முக்கிய இடங்களில் 23 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தவும், 600 பணியாளர்கள் பணியில் ஈடுபடவும் உள்ளனர்.அன்னதானம் வழங்குவதை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் 28 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
The post முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்; கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு 14 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு.! 25 தற்காலிக பஸ் நிலையங்கள், 3408 சிறப்பு பஸ்கள் appeared first on Dinakaran.