மதுரை: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே கொக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன் (36). இவர், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தனிப்படை காவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாண்டிசெல்வி (33). இவர்களுக்கு இரு மகன்கள். சமீபத்தில் உறவினரின் சுப நிகழ்வுக்கு கணவன், மனைவி டூவீலரில் சென்று திரும்பும்போது வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பாண்டிச்செல்வி கடந்த வாரம் உயிரிழந்தார்.
மனைவி இறந்த சோகத்தில் அனுமதி விடுமுறையில் இருந்த மலையரசன், கடந்த 18ம் தேதி டூவீலரில் மதுரை வந்தார். அங்கு திடீரென மாயமானார். அன்று மாலை மதுரை விமான நிலையம் அருகே ஈச்சனேரி பகுதி கண்மாயில் எரிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கிடந்தது. பெருங்குடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனிப்படை காவலராக இருந்ததால் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் மலையரசனை கொலை செய்திருக்கலாம் என்று கூறி, அவரது உடலை பெற மறுத்து நேற்று முன்தினம் மருத்துவமனையில் உறவினர்கள் ேபாராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சிவகங்கை மாவட்ட தனிப்படை போலீசார், பெருங்குடி போலீசார் இணைந்து, மலையரசனின் செல்போன், சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரிக்கின்றனர். சந்தேகத்தின் பேரில், மலையரசனிடம் இருந்த அவரது மனைவியின் செல்போனை வைத்திருந்தவர், சம்பவம் நடந்த பகுதியில் வாகனங்களில் வருவோரிடம் யாசகம் எடுக்கும் 2 திருநங்கைகள் உள்ளிட்ட 4 பேரை பிடித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து நேற்று காலை மலையரசனின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
அவரது உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தி முடிக்கப்பட்டது. விசாரணை குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘மலையரசனின் உடலை வேறு எங்கோ எரித்து கொண்டு வந்து இங்கு போட்டுச் சென்றதாக சந்தேகம் எழுந்துள்ளது. மனைவியுடன் டூவீலரில் சென்றபோதே இவரை தீர்த்துக்கட்ட முன்விரோதத்தில் கும்பல் வாகன விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
அதில் மனைவி இறந்து மலையரசன் தப்பியதால் ஆத்திரத்தில் இருந்த கும்பல், கடந்த 18ம் தேதி மதுரையில் இறப்புச் சான்று வாங்க வந்தபோது கடத்திச் சென்று கொலை செய்து எரித்திருக்கலாம். கண்காணிப்பு கேமரா காட்சிகளிலும் சில தடயங்கள் சிக்கியுள்ளன. மேலும், ஒரு உறவுப் பெண்ணுடன் மலையரசன் பழக்கத்தில் இருந்ததாகவும், இதில் குடும்பத்தகராறு இருந்து வந்ததும், அந்த பெண் தரப்பினர் ஆத்திரத்தில் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.
ஏற்கனவே காளையார்கோவில் பகுதியில் கஞ்சா, ரவுடிகள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்ததால் முன்விரோத கும்பல் கொலை செய்திருக்கலாமா என்ற ரீதியிலும் விசாரணை நடக்கிறது. மலையரசன் உடல் எரிந்து கிடந்த பகுதி அருகே கண்டெடுக்கப்பட்ட செல்போன் அவரது மனைவியின் செல்போன் என தெரிய வந்துள்ளது. அந்த செல்போனின் அழைப்புகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்’’ என்றனர்.
* சல்யூட் அடித்து மகன்கள் அஞ்சலி
மலையரசனின் உடல் தத்தனேரி மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு இரு மகன்களும் சல்யூட் அடித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது, பார்ப்போரை கண்கலங்க வைத்தது. தாய், தந்தையை அடுத்தடுத்து இழந்து தவிக்கும் இந்த இரு சிறுவர்களுக்கும் உறவினர்கள் ஆறுதல் கூறினர்.
The post முன்விரோதமா, குடும்பப் பிரச்னையா? சிவகங்கை தனிப்படை காவலர் கொலைக்கு காரணம் என்ன? 4 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.