மும்பை: கோல்ட்ப்ளேயின் முன்னணி பாடகரான கிறிஸ் மார்ட்டின் மும்பையில் நடக்க இருக்கும் தனது நிகழ்ச்சிக்கு முன்பாக, தனது காதலியும், ஹாலிவுட் நடிகையுமான டகோடா ஜான்சனுடன் அங்குள்ள சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். மும்பையில் இருக்கும் ஸ்ரீபாபுல்நாத் கோயிலில் அவர்கள் இருவரும் சாமி தரிசனம் செய்யும் வீடியோக்கள் சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.
47 வயதான கிறிஸ் பாரம்பரிய முறைப்படி குர்தா அணிந்திருந்தார். இந்திய கலாச்சராத்தை பிரதிபலிக்கும் படி கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். நடிகை டகோடா எளிமையான பிரிண்டட் ஆடை அணிந்திருந்தார். தனது தலையை முக்காடிட்டு மறைத்திருந்தார். சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் ஒன்றில், நடிகை டகோடா சிவ வழிப்பாட்டு முறைப்படி நந்தியின் காதில் வேண்டுதலைப் பகிர்ந்து சாமி தரிசனம் செய்தார்.