சென்னை: மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கவாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. ஒன்றிய அரசு இந்தி மொழியை தமிழக மாணவர்களிடம் திணிக்கும் வகையில் மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் ரூ.2 ஆயிரம் கோடி அல்ல ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் கூட இந்த மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அமைச்சர்கள் தமிழகம் வந்தால் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம், ஒன்றிய அரசு அலுவலகங்கள் நோக்கி பேரணி, ரயில் நிலையங்களில் இந்தி எழுத்து அழிப்பு, மறியல் என்று போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர் அமைப்புகளும் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளது. இதனால், ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. தற்போது மும்ெமாழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நாடு கடந்து நடக்க தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மும்மொழி கொள்கை திணிப்பை எதிர்த்து அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் அமெரிக்க வாழ் தமிழர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், ‘‘வேண்டாம், வேண்டாம் மும்மொழி கொள்கை வேண்டாம். மிரட்டாதே, மிரட்டாதே தமிழர்களை மிரட்டாதே. திணிக்காதே திணிக்காதே இந்தி மொழியை திணிக்காதே” என்று கோஷங்களை எழுப்பினர்.
The post மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு; அமெரிக்கவாழ் தமிழர்கள் போராட்டம்: மோடி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர் appeared first on Dinakaran.