சென்னை: மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு, நிதி தர மறுப்பு.. என தமிழக மக்கள் மீது ஒன்றிய பாஜ அரசு காட்டுகிற அத்துமீறலை ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா? என்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மும்மொழி கொள்கை, இந்தி திணிக்க முயற்சி, தமிழ்நாட்டுக்கு பல்வேறு நிதிகள் புறக்கணிப்பு என ஒன்றிய அரசின் சர்வாதிகார போக்குக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். அதன் விவரம்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: மும்மொழிக் கொள்கை என ஒன்றிய பாஜ அரசு எதற்காக சொல்கிறார்கள் என்றால், பல மாநிலங்களில் தாய் மொழி அழிந்து வருகிறது. இவர்கள் இந்தி, சமஸ்கிருதத்தை நிலை நிறுத்துவதற்காக இதை கொண்டு வருகிறார்கள். எனவே, இதில் முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளார். இதை வரவேற்கிறோம். தமிழ்நாட்டை மாற்றந்தாய் பிள்ளையை போல் ஒன்றிய பாஜ அரசு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து வஞ்சிக்கிறது. மிக்ஜாம் புயல் பாதிப்பால் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை சீரமைக்க எத்தனை ஆயிரம் கோடி வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார். ஒன்றிய குழுவும் வந்து பார்வையிட்டனர். கடைசியில் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. நமது பணத்தை தர மறுப்பது அடாவடித்தனம், அராஜகம்?. இந்தி திணிப்பை ஒருபோதும் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது. எந்த மொழிக்கு எதிரானவர்கள் தமிழர்கள் இல்லை. எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம்.
திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன்: ஒன்றிய அரசு மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை கொண்டு வந்து திணிப்பது என்பது தமிழக மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற நினைக்கின்றனர். இந்தி படிக்க எனக்கு என்ன தேவை உள்ளது. கல்வியை வைத்து அரசியல் செய்வதாக ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். எங்களுக்கு தர வேண்டிய நிதி என்பது நாங்கள் தரும் வரிப்பணம். அதனை கொடுக்க மறுப்பது ஏன்? சட்டம் இயற்றவும், வரி வசூலிக்கவும், நிதி பகிர்வு செய்யவும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என அம்பேத்கர் கூறியுள்ளார். ஒரு மாநிலத்தின் உரிமையை பறிப்பதற்கு ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் நிதி தருவோம் என்று சொல்வதெல்லாம் சர்வதிகாரத்தின் உச்சம். ஒன்றிய அரசு அடாவடிதனமாக செய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் விளக்கத்தை கல்வி அமைச்சருக்கு புரிகிறதா..? இல்லையா..? என்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. எதிர்கட்சி ஆளும் மாநிலத்தை ஒன்றிய அரசு மோதல் போக்கை கடைபிடிக்கிறது. இத்தகைய கோட்பாடு என்பது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது. இதே போன்று, நிதி தராமல் மாநில அரசை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. கல்வி நிதி மட்டுமல்ல, இயற்கை பேரிடர் நிவாரண நிதி,100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு குறைவான நிதி என தொடர்ந்து நிதி விஷயத்தில் தமிழ்நாட்டை பழிவாங்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி ஒன்றிய அரசு வற்புறுத்தி வருகிறது. தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்வி முற்றிலுமாக பாதிக்கும். ஒரே நாடு, ஒரே மொழி என்கிற நிலையை ஒன்றிய அரசு உருவாக்குகிறது. இதன் மூலமாக பிற தாய்மொழிகளை அழிப்பதற்கான முயற்சி. இந்தி படித்தால் தான் நல்லது என்றால், எதற்கு இந்தி படித்த பல கோடி பேர் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். தமிழ்நாட்டிற்கு நிதி தரமாட்டேன் என்று சொல்வதெல்லாம், உண்மையில் தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறதா..? அல்லது இந்தியாவில் இருந்து தமிழ்நாடு வேண்டாம் என்று சொல்கிறார்களா..? என்று புரியவில்லை. இது ஜனநாயகத்தை காப்பதற்கான போர் இது. இது கல்விக்கான, நிதிக்கான போர் மட்டுமல்ல ஜனநாயகத்தை காக்க கூடிய போர் என்ற முறையில் அனைவரும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: உலகம் போற்றும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், இந்தியையா கற்றுக் கொண்டார்? சங்க இலக்கியங்களையும், ஐம்பெருங்காப்பியங்களையும் எழுதியவர்கள் இந்தியை கற்றுக்கொண்டா எழுதினார்கள்? உலகில் முதலில் தோன்றிய மொழியான தமிழை அழிக்கும் நோக்கில், இந்தியை புகுத்த நினைக்கிறார்கள்”. உலகில் முதலில் தோன்றிய மொழியான தமிழை அழிக்கும் நோக்கில், இந்தியை புகுத்த நினைக்கிறார்கள். தமிழ் மண்ணும், மக்களும் மும்மொழிக் கொள்கையை எந்நாளும் ஏற்க போவதில்லை. ஒன்றிய பாஜ அரசு நிதியை விடுவித்து மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும். மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாக வழிவகுக்காதீர்கள்.
The post மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு, நிதி தர மறுப்பு..ஒன்றிய அரசின் அத்துமீறலை முறியடிக்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.