சென்னை: ‘எம்புரான்’ திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். தொடர்ந்து அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை கொச்சைப்படுத்தி வரும் போக்கை மலையாள திரையுலகம் கைவிட வேண்டும் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகர்கோவில், தென்காசி, கம்பம், போடி, பொள்ளாச்சி, கோவை என தெற்கில் இருந்து வடக்கு வரை கணிசமாக தமிழ் நிலத்துடன் தொழில், சுற்றுலா ரீதியில் கேரள மாநிலம் தொடர்பில் இருக்கிறது. இந்த எல்லைப் பகுதிகளில் இரு மாநில மக்களுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. உயர் கல்விக்காகவும், வேலைக்காகவும், மலையாளிகள் இடம் பெயரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இப்படி சகோதரத்துடன் தமிழர்களும், கணிசமான மலையாளிகளும் இருந்து வரும் நிலையில், மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து தமிழர்களை கொச்சைப்படுத்தி வருவது என்பது கடும் கண்டனத்துக்குரியது.