முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை கைப்பற்ற சதி நடப்பதாகவும், அதை கண்டித்து நாடு முழுவதும் விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசு, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான விரோத செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தால் குழப்பத்தை ஏற்படுத்தினர். காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி கொந்தளிப்பை ஏற்படுத்தினர். வக்பு திருத்தச் சட்ட மசோதா மூலம் நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக கிராம மக்களை தூண்டிவிட்டனர். காசி, மதுரா மஸ்ஜிதுகள் பற்றி அவதூறுகளை பரப்பினர். மஸ்ஜித் வளாகங்களில் நடத்தப்படும் மதரஸா கல்விக் கூடங்களை இழுத்து மூட உத்தரவிட்டனர்.