*விருத்தாசலத்தில் பரபரப்பு
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இந்தியாவிலேயே புகழ்பெற்ற செராமிக் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வடிவங்களில் செராமிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு தயாரிக்கப்படும் செராமிக் பொருட்களை சுடுவதற்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக செராமிக் தொடர் சுடுசூளை ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இயங்கி வந்தது. இந்த தொழிற்பேட்டையை நம்பி விருத்தாசலத்தை சுற்றியுள்ள சுமார் 4000க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தொழிற்சங்கங்களின் போட்டி காரணமாக கடந்த 20 வருடங்களாக சுடுசூளை செயல்பாடு இன்றி மூடி கிடக்கிறது. இந்த சுடுசூளையை மீண்டும் இயக்குவதற்கு சிட்கோ நிர்வாகம் கையகப்படுத்தி கடந்த 55 ஆண்டுகளாக மிகவும் அனுபவம் வாய்ந்த செராமிக் தொழில் செய்யும் வாடகை பாக்கியும், அரசுக்கு எந்த பாக்கியும் இல்லாத 10 நபர்களை கண்டறிந்து அவர்களிடத்தில் பராமரிப்பு பணி செய்வதற்கான சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதியை சட்டமன்ற கூட்டத் தொடரில் ரூ.2.5 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தொடர் சுடு சூளையை நிர்வாகம் திறக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது சுடுசூளையை திறப்பதற்கு சிட்கோ நிறுவனம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அங்கிருந்த பழைய மிஷினரி பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கிருந்த ஜெனரேட்டர், டிரான்ஸ்பார்மர், ஏர் கம்ப்ரசர் மற்றும் பத்து டன் எடையுள்ள இரும்பு சாமான்கள் ஆகியவற்றை பழைய இரும்பு கொள்முதல் செய்யும் நிறுவனத்துக்கு ஒப்படைத்துள்ளது. இதனால் அந்த பொருட்களை ஏற்றுவதற்காக சிட்கோ நிறுவன கிளை மேலாளர் கடலூர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில் செராமிக் தொழில் செய்து வரும் மதிமுக மாநில செயற்குழு உறுப்பினர் சௌந்தரராஜன் மற்றும் செராமிக் தொழிலாளிகள் அங்கு திரண்டு வந்து அவர்களிடம் டெண்டர் விடாமல் இந்த பொருட்களை ஏற்றக்கூடாது.
அனைத்து பொதுமக்கள், தொழிலாளர்கள் அறியும் வகையில் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து டெண்டர் விடப்பட்டுதான் இந்த பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டும். யாருக்கும் தெரியாமல் ஏன் எடுக்கிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சிறு தொழில் நிறுவனத்தின் பொது மேலாளரிடத்தில் இருந்து வரப்பெற்ற ஆணையின் அடிப்படையில் எடுக்கிறோம் என கூறி அதற்கான சான்றுகளை காண்பித்து பதில் அளித்தனர்.
இருப்பினும் அவர்கள் இதுபோன்று ஏற்கனவே ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாகத்தான் நிறுவனம் செயல்படாமல் நின்றது. இப்போதும் இதே நிலை தொடரும் சூழ்நிலை இருந்து வருகிறது என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
The post மூடிக்கிடக்கும் செராமிக் தொழிற்பேட்டையில் பழைய பொருட்களை எடுக்க வந்த சிட்கோ அதிகாரிகளிடம் தொழிலாளிகள் வாக்குவாதம் appeared first on Dinakaran.