தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த பத்மா, கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் பத்தனம் திட்டா மாவட்டத்தில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில் முன்னேறிய மாநிலமான கேரளாவில் நரபலி சம்பவம் நடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித குலம் எங்கே செல்கின்றது என்ற கேள்வியும் அழுத்தமாக எழுந்துள்ளது. முக்கியமாக, நரபலி கொடுக்கப்பட்ட பெண்கள் மாமிசத்தை குக்கரில் வேக வைத்து சாப்பிட்டது கொடூரத்தின் உச்சக்கட்டம். அறிவியல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நாடு முன்னேறி உள்ள நிலையில், நரபலி உள்ளிட்ட விஷயங்கள் நடப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் நடந்துள்ள நரபலி சம்பவத்தில் உண்மை நிலையை வெளிக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அதிரடி நடவடிக்கையை கேரளா அரசு மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பேய் ஓட்டுதல் மற்றும் பில்லி சூனியம் வைத்தல் உள்ளிட்ட செயல்களில் போலி மந்திரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதை உண்மை என பொதுமக்கள் நம்பி, போலி மந்திரவாதிகளிடம் ஏமாறுகின்றனர். குறிப்பாக, அறிவியல் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றிற்கு தொடர்பு இல்லாத நரபலி, பேய் ஓட்டுதல், பில்லி சூனியம் வைத்தல் ஆகியவை மூட நம்பிக்கை தான் என்பதை மக்கள் அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக, பணம் அதிகமாக கிடைக்கும் மற்றும் புதையல் இருப்பதாக கூறி அவ்வப்போது நரபலி உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, வீட்டில் உள்ள குடும்ப தலைவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டால், நரபலி கொடுக்கப்படும் கோர சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. கடந்த காலங்களை விட தற்போது மூட நம்பிக்கை குறைந்துள்ளது. இருப்பினும், முழுமையாக குறையவில்லை என்பது தான் ேவதனை. மூட நம்பிக்கை விஷயத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே, முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் அறிவியல் பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
படிப்பறிவு இருந்தும் மூடநம்பிக்கை மீது மக்கள் நம்பிக்கை கொள்வது ஏன்? உளவியல் ரீதியாக அவர்கள் எப்படி மாறுகின்றனர். முக்கியமாக, பொருளாதார ரீதியாக அவர்கள் பின்னடைவை சந்திக்கும் போது, மூட நம்பிக்கை மீது அதீத நம்பிக்கை கொள்கின்றனர். இது கொலையில் முடிகிறது. கேரளாவில் நடந்துள்ள நரபலி சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அறிவியல் வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் நிலையில், மனித மாமிசத்தை மனிதர்களே உண்ட சம்பவம் கோரத்தின் உச்சம். இவ்விஷயத்தில் அதிரடி நடவடிக்கையை கேரளா அரசு எடுக்க வேண்டும்.
தற்போது, நாட்டில் நடந்து வரும் சம்பவங்களை பார்க்கும் போது மூட நம்பிக்கையை ஒழிப்பது எளிதான காரியம் அல்ல. மூட நம்பிக்கையை மேலும் ஊக்குப்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்கள் நடந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவியலுக்கு ஒவ்வாத எந்த ஒரு விஷயத்திலும் பொதுமக்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து, மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்