மூணாறு: மூணாறு அருகே, குப்பை சேகரிப்பு மையத்தில் இரண்டு காட்டு யானைகள் திடீரென மோதிக் கொண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்து தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே, நல்லதண்ணி கல்லார் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை சேகரிப்பு மையம் உள்ளது. மூணாறு நகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சேகரிக்கப்படும் உணவு, பிளாஸ்டிக், காய்கறி கழிவுகள் இந்த மையத்தில் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. இங்கு 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குப்பையை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குப்பை சேகரிப்பு மையம் வனப்பகுதியை ஒட்டி இருப்பதால், இங்கு வனவிலங்குகள் வருவதும், குப்பைக் கழிவுகளை தின்று தொழிலாளர்கள் மிரட்டி அச்சுறுத்துவதும் அடிக்கடி தொடர்ந்து நடந்து வருகின்றன.
குறிப்பாக யானைகள் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றும் மதியம் குப்பை சேகரிப்பு மையத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு திடீரென 2 காட்டு யானைகள் வந்தன. அவைகள் பிளிறியபடி ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. இதைப் பார்த்து அச்சமடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். இதனால், குப்பை சேகரிப்பு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் இரண்டு யானைகளையும் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
The post மூணாறு அருகே குப்பை சேகரிப்பு மையத்தில் காட்டு யானைகள் மோதல்: அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள் appeared first on Dinakaran.