வாஷிங்டன்: செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்த டிரம்ப் 3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட சில வழிகள் உள்ளதாக கூறினார். பல்வேறு மாகாணங்களில் 70 சதவீதத்திற்கு மேல் குடியரசு கட்சிக்கு வாக்குகள் பதிவானதாக குறிப்பிட்ட அவர் பெரும்பாலான மக்கள் தன்னை மீண்டும் அதிபராக காண விருப்பம் கொண்டுள்ளதாக கூறினார். எனினும் டிரம்ப் விரும்புவதை அமெரிக்க அரசமைப்பு சட்டம் அனுமதிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் முன்னாள் அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் தொடர்ந்து 4வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது 1951ல் அமெரிக்க அரசமைப்பு சட்டத்தில் 22வது திருத்தும் கொண்டுவரப்பட்டது. அதன்படி இருமுறைக்கு மேல் எவராலும் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட முடியாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஒருவேளை அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யலாம் என்றாலும் அதிலும் சிக்கல் உள்ளது.
அரசமைப்பில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் மேலவையான செனட் சபை ஆகிய இரு அவைகளிலும் 3ல் இரு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதலோ அல்லது 50 மாகாணங்களில் 3ல் இரு பங்கு எண்ணிக்கையான 38 மாகாண சட்டமன்றங்களின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியமாகிறது. இரு அவைகளிலும் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் சிறிய அளவிலான வித்தியாசமே உள்ளதால் அதனை நிறைவேற்றுவதும் சாத்தியம் இல்லாததாகவே உள்ளது.
மற்றொருவழி உண்டென்றால் தற்போது துணை அதிபராக உள்ள ஜே.டி. வான்ஸ் அதிபர் வேட்பாளராகவும், டிரம்ப் துணை அதிபர் வேட்பாளராகவும் போட்டிஇட வேண்டும் ஒரு வேலை ஜே.டி. வான்ஸ் அதிபராக தேர்தெடுக்கப்பட்டால் அவர் ராஜினாமா செய்யும் பட்சத்தில் டிரம்ப் மீண்டும் அதிபராக முடியும். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அதிபர் தேர்தலுக்கு போட்டியிட தகுதி இல்லாத ஒருவரால் துணை அதிபர் தேர்தலிலும் நிற்க முடியாது என்று அரசமைப்பின் 12வது திருத்தும் கூறுகிறது.
The post மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவேன்.. நகைச்சுவைக்கு குறிப்பிடவில்லை: அதிபர் டிரம்ப் பேச்சு appeared first on Dinakaran.