பிரான்ஸ் பிரதமர் மிஷேல் பார்னியருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்துள்ளது. கடந்த 1962-ம் ஆண்டுக்குப் பிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலமாக பிரான்ஸ் அரசு கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறை. தற்போது பிரான்ஸில் நிலவி வரும் அரசியல் கொந்தளிப்பு, ஐரோப்பிய யூனியனையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் பின்புலம் குறித்தும், ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்தும் பார்ப்போம்.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், அந்நாட்டின் பிரதமர் மிஷேல் பார்னியேர் சமீபத்தில் 2025-ம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், அதிபர் மேக்ரோனின் ஆதரவு இருப்பதால், அதிபரின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பட்ஜெட்டை நிறைவேற்ற மிஷேல் பார்னியேர் முயன்றார். அவரின் முயற்சியின் எதிர்விளைவால், பிரதமர் மீது பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.