2008-ம் ஆண்டு இன்றைய தினம் (ஏப்.18) ஐபிஎல் பிறந்தது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இடையே முதல் போட்டி மூலம் ஐபிஎல் அன்று இன்றைய தினத்தில் பிறந்தது. கோலாகலமான, வண்ணமயமான பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் ஐபிஎல் இன்றைய தினத்தில் தொடங்கியது.
இன்று இந்தத் தொடருக்கு இருக்கும் கவர்ச்சியை உருவாக்கிய பிதாமகர் நியூஸிலாந்தின் விக்கெட் கீப்பர் அதிரடி பேட்டர் பிரெண்டன் மெக்கல்லம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அடித்த 158 ரன்கள்தான் என்றால் அது மிகையாகாது. 73 பந்துகளில் 158 ரன்களை விளாசினார் பிரெண்டன் மெக்கல்லம். முதல் ஐபிஎல் போட்டியிலேயே கொல்கத்தா 222/3 என்ற பெரிய இலக்கை எட்ட ஆர்சிபி அணி 82 ரன்களுக்குச் சுருண்டு மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.