சென்னை: திருமங்கலம் எம்விஎன் நகர், நந்தனம் மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய மெட்ரோ நிலையங்களில் உள்ள இடங்களில் வணிக மேம்பாட்டிற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக தனியார் நிறுவனங்களுடன் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், திருமங்கலம் எம்விஎன் நகர், நந்தனம் மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய இடங்களில் வணிக வளர்ச்சிக்கான முக்கிய இடங்களை கண்டறிந்து பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து கூடுதல் வருவாயை ஈட்டுவதற்கான முயற்சிகளை திட்டமிட்டுள்ளது.
இதன்படி, எம்விஎன் நகரில் உள்ள வணிக மேம்பாடு, விரைவில் அமைய உள்ள திருமங்கலம் மெட்ரோ நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளுடன் தடையின்றி இணைக்கப்படும். நந்தனத்தில் உள்ள வணிக மேம்பாடு பகுதிகள் தற்போதுள்ள மெட்ரோ நிலையத்திற்கு அருகிலும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸ்க்கு எதிரேயும் அமைந்துள்ளன. ஆயிரம்விளக்கு மெட்ரோ நிலைய வணிக மேம்பாடு முதல் மற்றும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் ஒருங்கிணைக்கப்படும்.
இறுதி விரிவான திட்ட அறிக்கை மார்ச் 2025க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமங்கலத்தில் எம்விஎன் நகர், நந்தனம் மற்றும் ஆயிரம்விளக்கு ஆகிய இடங்களில் வணிக மேம்பாட்டிற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், சாத்தியக்கூறு ஆய்வு, சந்தை பகுப்பாய்வு, பரிவர்த்தனை ஆலோசனை, கருப்பொருள் திட்டங்கள், நிலப் பயன்பாட்டு அறிக்கை போன்றவற்றை சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், சென்னை மாநகராட்சியிடம் ஒப்புதலுக்காக ஆவணங்களை சமர்ப்பித்தல், செலவு மதிப்பீடு தயாரித்தல் மற்றும் ஒப்பந்த ஆவணங்களை தயாரித்தல் போன்ற பணிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம், 2 தனியார் நிறுவனத்திற்கு ரூ.41.87 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பு கடிதம் கடந்த டிசம்பர் மாதம் வழங்கப்பட்டது. இதனை திட்ட இயக்குநர் அர்ச்சுனன் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் தனியார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
The post மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக மேம்பாட்டிற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் appeared first on Dinakaran.