சென்னை: சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கவும், மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் வாகன நிறுத்த கட்டணத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும் வாகனங்களுக்கு டோல்கேட் முறையில் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியானது, பார்க்கிங் திட்டத்தின் கீழ் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதில் குறிப்பாக சென்னையின் முக்கிய சுற்றுலா தலமான மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் பார்க்கிங் தொடர்பான பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. இதனை சமாளிக்க தனியார் நிறுவனம் மூலம் இந்த பகுதிகளில் எவ்வாறு பார்க்கிங் முறையை மக்களுக்கு எளிதாக மாற்றி, வருவாயை அதிகரிக்க முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது.
அந்த வகையில், மெரினா கடற்கரையில் எதை நுழைவு வழியாகவும், எதை வெளியேறும் வழியாகவும் அமைப்பது? கிடைக்கும் வருவாயில் சேவை வழங்கும் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இடையிலான பங்கீட்டு அளவு எவ்வளவு? கட்டண வசூலில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகள் போன்ற சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.இதை கொண்டு வந்தால், சுங்கச்சாவடி போல, மெரினா கடற்கரை வாகன நிறுத்த பகுதிக்குள் வாகனங்கள் வந்தாலே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். மேலும், நவீன சென்சார்கள் மூலம் எங்கெங்கு வாகன நிறுத்த இடங்கள் காலியாக உள்ளது என செயலி மூலமாக வாகன ஓட்டிகளே பார்த்து தெரிந்துகொள்ளும் வசதியை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தற்போது மெரினாவில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு வார நாட்களில் சுமார் ரூ.6 ஆயிரமும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் வாகன நிறுத்த கட்டணம் வசூலாகிறது. நவீன முறையை கொண்டு வந்தால், இந்த வருவாய் இரட்டிப்பாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்தான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இதற்கான கணக்கெடுப்பு பணிகள் 6 நாட்கள் நடைபெற்றது. இதில் மொத்தமாக 15 பணியாளர்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பணியாற்றுவார்கள். வாகன நிறுத்தத்திற்கு வரும் வாகனங்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் நேரத்தை Wiitronics இன் MPOS பயன்பாடு மூலம் வானக ஓட்டிகள் அறிந்து கொள்ள முடியும். மேலும் வாகன நிறுத்தும் இடத்தில் சராசரியாக வாகன நிறுத்தத்திற்கான நேரம் மற்றும் நெரிசல் மிகுந்த போக்குவரத்து நேரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
தற்போது மெரினா கடற்கரையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே வருவதற்கு 3 நுழைவாயில்கள் உள்ளன. இதனை ஒட்டுமொத்தமாக உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித்தடத்தினை 5 ஆக மாற்றி, மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகே வாகனங்கள் உள்ளே வருவதற்கும், அந்த வாகனங்கள் ராணி மேரி கல்லூரிக்கு எதிரே உள்ள சாலையில் இருந்து வெளியே செல்வது போன்று அமைக்கப்படும். இந்த வாகன நிறுத்தும் இடத்தில் 1,100 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும், 510 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தவதற்கும், 40 பேருந்துகள் நிறுத்துவதற்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேலைநாட்களில் 1,134 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும், வார இறுதி நாட்களில் 5,720 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவதற்கான வாய்ப்புள்ளது.
அதே போல வேலை நாட்களில் 884 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும், வார இறுதி நாட்களில் 3,600 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வாய்ப்புள்ளது. வார இறுதி நாட்களில் 40 முதல் 50 பேருந்துகள் குறைந்தபட்சம் 4 மணி நேரம் வாகன நிறுத்ததில் நிறுத்தலாம். இருசக்கர வாகனத்திற்கு ரூ.5 ரூபாய் அளவிலும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.20 அளவிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஒரு மாதத்தில் உள்ள 18 வேலை நாட்களில் மெரினா கடற்கரைக்கு வரும் இருசக்கர வாகனங்கள் மூலம் ரூ.1,02,060 வருவாய் ஈட்டும். ஒரு மாதத்தில் உள்ள 12 வார இறுதி நாட்களில் இருசக்கர வாகனங்கள் மூலம் ரூ.3,43,200 வருவாய் ஈட்டும்.ஒரு மாதத்தில் உள்ள 18 வேலை நாட்களில் மெரினா கடற்கரைக்கு வரும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் ரூ.3,18,240 வருவாய் கிடைக்கும். ஒரு மாதத்தில் உள்ள 18 வேலை நாட்களில் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் ரூ.8,64,000 வருவாய் கிடைக்கும்.
மொத்தமாக மெரினா கடற்கரைக்கு வருகை புரியும் இரு சக்கர வாகனம் மூலம் ஒரு மாதத்திற்கு ரூ. 4,20,300 , மொத்தமாக மெரினா கடற்கரைக்கு வருகை புரியும் நான்கு சக்கர வாகனம் மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.12,07,200 என மொத்தமாக ரூ.16,27,500 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.சாலையின் இடதுபுறத்தில் இருந்து மட்டுமே நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படும், குறுக்கு வழிகளோ, இலவச நுழைவோ கிடையாது. மேலும், ஃபாஸ்டேக் (Fastag) அடிப்படையில் பணம் பெறப்பட்டு வாகனங்கள் வெளியேறும்போது தடை ஏதும் இல்லை.சாலையின் இடதுபுறத்தில் இருந்து மட்டுமே இரு சக்கர வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படும். இருசக்கர வாகன நிறுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும். இரு சக்கர வாகனத்திற்கு தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் வாகனங்களுக்கு டோல்கேட் முறையில் கட்டணம்; மெரினாவில் மாதம் ரூ.17 லட்சம் வருவாய்: நுழைவு வாயில்களை அதிகரிக்க திட்டம் appeared first on Dinakaran.