தெற்கு ஐரோப்பிய நாடான மேசடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று, “வடக்கு மேசடோனியாவின் கோக்கானி பகுதியில் உள்ள ஓர் இரவு விடுதியில் ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர். இந்த இரவு விடுதி தலைநகர் ஸ்கோப்ஜேவில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ளது. விபத்தில் பலரும் காயமடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்.” என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து மேசடோனியா அரசுத் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல் ஏதுமில்லை.