கோவை: மேட்டுப்பாளையம் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளி வினோத்குமாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி வர்ஷினி பிரியாவை கனகராஜ் திருமணம் செய்துகொண்டார். வழக்கில் கனகராஜ் சகோதரர் வினோத்குமார் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த, வர்சினி பிரியா – கனகராஜ் ஆணவக் கொலை (இரட்டைக் கொலை) வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனகராஜன் சகோதரர் வினோத்குமார் தனது கூட்டாளிகளின் உதவியோடு, காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கனகராஜ் மற்றும் வர்சினி பிரியா இருவரையும் வெட்டி படுகொலை செய்தார்.
இந்த வழக்கில் வினோத்குமார் A1 குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில், ஐயப்பன், கந்தவேலு, சின்ராஜ் உள்ளிட்ட வரும் வழக்கில் தொடர்புடையவர்களாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியான விவேகானந்தன் கடந்த 23ம் தேதி தீர்ப்பு வழங்கினார்.
அதில், ஆணவக் கொலை வழக்கில் இருந்து 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கனகராஜ் சகோதரர் வினோத்குமார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும் குற்றவாளிக்கு மரண தண்டனை வரை கொடுக்கும் அளவுக்கு குற்றம் செய்துள்ளார் என தெரிவித்து, வழக்கு விசாரணையை 29ம் தேதிக்கு(இன்றைக்கு) ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று தம்பதி ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளி வினோத்குமாருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
The post மேட்டுப்பாளையம் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளி வினோத்குமாருக்கு மரண தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.