மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாய் உடைப்பால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட 1 அலகில் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று முதல் பிரிவில் 1வது அலகின் டீசல் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. ஏராளமான டீசல் கழிவுநீர் கால்வாய் வழியாக வெளியேறியது. தகவலறிந்த அனல் மின் நிலைய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் பொக்லைன் மூலம் உலர் சாம்பலை கால்வாயில் நிரப்பி டீசல் வெளியேறாமல் தடுத்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர், டீசல் குழாய் பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும், டீசல் பைப்லைன் உடைந்த பகுதியை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
The post மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.