*விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை
பவானி : மேட்டூர் மேற்கு கரை பாசன பகுதியில் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததை தொடர்ந்து கடந்த வருடம் ஜூன் மாத இறுதியில் முழு கொள்ளளவை எட்டியது.
வழக்கமாக வாய்க்கால் பாசனத்துக்கு ஆகஸ்ட் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், காவிரி ஆற்றில் உபரிநீர் வீணாக செல்வதால், வலது மற்றும் இடது கரை வாய்க்கால்களில் வழக்கமாக திறக்கப்படும் நாளுக்கு முன்னதாக, கடந்த வருடம் ஜூன் 30ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த வருடம் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், வாய்க்கால் பாசன பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டு நிலங்கள் காய்ந்தும், ஏரிகளில் தண்ணீரில்லாமல் வறண்டு போனது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து இருந்தது. இதனால், உயிர் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் செய்யும் மனநிலையில் இருந்தனர்.
வாய்க்கால் தூர் வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்தும், புதர்மண்டியும், கிளை வாய்க்கால்கள் பல இடங்களில் சேதமடைந்தும் இருந்ததால் கடைமடைகளுக்கு தண்ணீர் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் மத்தியில் நெல் சாகுபடி செய்வதில் ஆர்வமின்றி காணப்பட்டனர்.
இதனால், சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னரே நெல் நாற்றங்கால் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.அவ்வப்போது பெய்த மழைக்கிடையே பரவலாக நெல் நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கினர். மேட்டூர் மேற்கு கரை வாய்க்கால் பாசன பகுதியில் பவானி வட்டாரத்தில் சுமார் 1,700 ஹெக்டர் பரப்பளவிலும், அம்மாபேட்டை வட்டாரத்தில் 2,170 ஹெக்டர் பரப்பளவிலும் நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது.
நெல் ரகங்களான ஏடிடி 38, ஏடிடி 39, ஐஆர் 20, பிபிடி, திருச்சி 3, அம்பாசமுத்திரம் 16, சிஆர் 1009, பொன்னி, தனுஷ்கா, அம்மன் பொன்னி பரவலாக அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். இதுதவிர, கருப்புக்கவணி, மாப்பிள்ளை சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய ரகங்களை இயற்கை விவசாயம் மூலம் தங்களின் வீட்டு தேவைக்காக விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
நெல் சாகுபடியில் அதிக விளைச்சல் தரும் ஒற்றை நாற்று நடவு முறையில் பவானி வட்டாரத்தில் சுமார் 1,200 ஹெக்டேரிலும், அம்மாபேட்டை வட்டாரத்தில் சுமார் 1,600 ஹெக்டேர் பரப்பளவிலும் விவசாயிகள் நெல் நடவு செய்திருந்தனர். சாதாரண நடவில் 1,070 ஹெக்டரில் நெல் நடவு செய்யப்பட்டது.
மேட்டூர் அணை தொடர்ந்து நிரம்பிய நிலையில் இருந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தாலும் வாய்க்கால் பராமரிப்பு இல்லாததால் தலைமடைகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்த நிலையில், கடைமடைகளுக்கு தண்ணீர் தேவை தொடர்ந்து வந்தது.
இதனால், தங்களின் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் பிரச்சினை நிலவி வந்தது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு முதலே நீர் மேலாண்மையில் குளறுபடி காணப்பட்டுள்ளது. தண்ணீர் தேவைப்படும் நடவு காலத்தில் வாய்க்காலில் தண்ணீர் திறப்பதை குறைப்பதும், தேவைப்படாதபோது அதிகம் திறக்கப்பட்டும் உள்ளது.
சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கனமழை பெய்தால் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் குறை கூறியுள்ளனர்.நெல் சாகுபடிக்கு வருடந்தோறும் அதிகரிக்கும் செலவு விவசாயிகளை கவலைக்குள் தள்ளியது.
நெல் நாற்றங்கால் தயார் செய்தல், விதை நெல் வாங்குதல், உழவு, வரப்பு பூசுதல், பூச்சிகள், நோய்களை கட்டுப்படுத்த மருந்துகள், பயிர் வளர்ச்சிக்கு தேவையான உரங்கள், மருந்து தெளிக்க கூலியும் உயர்ந்துள்ளது. ஏக்கருக்கு சராசரியாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையில் செலவானது. நெல் சாகுபடியில் நோய்த்தாக்குதல் பரவலாக காணப்பட்டவதாகக் கூறப்படுகிறது.
விவசாயிகளுக்கு தண்ணீர் தடையின்றி கிடைக்க வாய்க்கால் பராமரிப்பு மிக முக்கியமானது. கடந்த இரு வருடங்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் கொண்டு வாய்க்கால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நடப்பு தண்ணீர் திறப்பு பருவத்தில் முற்றிலும் 100 நாள் தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. தற்போது, தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு, அறுவடைக்காலம் தொடங்கும் நிலையில் அதே தொழிலாளர்கள் வாய்க்கால் கரைகளில் பராமரிப்பு வேலைகளை செய்து வருகின்றனர்.
கடந்த 15ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. வயல்வெளிகளில் ஈரம் காய்ந்து வருவதால், நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு பரவலாக அறுவடை பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வழக்கமாக காணப்படும் மழை, பனி, வெயில் காலங்களில் தட்பவெட்ப நிலையில் அடிக்கடி மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளதால் நெல் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
The post மேட்டூர் மேற்கு கரை வாய்க்கால் பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.