*மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கம்
மதுரை : மதுரை கோரிப்பாளையத்தில் மேம்பால கட்டுமானப்பணிக்காக ஏ.வி. மேம்பாலம் நேற்று காலை முதல் மூடப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்விதமாக தமுக்கம் முதல் நெல்பேட்டை வரை ரூ.190 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மேம்பால கட்டுமானப்பணிக்காக நெல்பேட்டை பகுதியில் கடைகள், வீடுகள் கையகப்படுத்தும் பணி முடிந்து இடித்து அகற்றப்பட்டன. இதையடுத்து பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மேம்பாலத்தில் ஒரு பிரிவு செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதிக்கு செல்கிறது. இதற்காக தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தமுக்கம் முதல் கோரிப்பாளையம் வரை மேம்பாலம் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலத்திற்காக முக்கிய தூண்கள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இந்த பணியை துவக்க வேண்டும் என்றால் கோரிப்பாளையம் ஏ.வி. மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, போக்குவரத்தை தடை செய்து மாற்று வழி ஏற்பாடு செய்து தருமாறு போக்குவரத்து போலீசாரிடம், நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் இளமாறன் தலைமையில் போக்குவரத்து போலீசார் கோரிப்பாளையத்தில் மாற்று ஏற்பாடுகளை நேற்று காலை மேற்கொண்டனர்.
கோரிப்பாளையம் ஏ.வி. மேம்பாலம் மெயின் பாதையை பேரிகார்ட்களை வைத்து வாகனங்கள் செல்லாத வகையில் அடைத்துள்ளனர். இவ்வழியாக செல்லும் வாகனங்கள் மீனாட்சி கல்லூரி சாலையில் பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சறுக்குப்பாதை வழியாக ஏ.வி. மேம்பாலத்தில் ஏறி சிம்மக்கல் செல்லலாம். மேலும், இந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் எந்த வழித்தடம் வழியாக செல்ல வேண்டும் என பிளக்ஸ் பேனரும் வைக்கப்பட்டுள்ளது.
ஆரப்பாளையம், பாத்திமா கல்லூரி, திண்டுக்கல், தேனி செல்லும் வாகனங்கள் கோரிப்பாளையத்தில் ஏ.வி. மேம்பாலத்திற்கு சற்று முன்பு வரை வந்து இடது பக்கம் திரும்பி மூங்கில் கடை வழியாக செல்ல வேண்டும்.
அங்கு வைகை ஆற்று (அழகர் ஆற்றில் இறங்கும் இடம்) ரோட்டிற்கு வலது புறமாக திரும்பி ஆரப்பாளையம் செல்ல வேண்டும். அதுபோல அண்ணா சிலை, நெல்பேட்டை, யானைக்கல், சிம்மக்கல், தெற்குவாசல், ரயில்நிலையம், பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் வாகனங்கள் மீனாட்சி கல்லூரி பாதை வழியாக செல்ல வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் மேம்பாலம் கட்டுமானப்பணி முடியும் வரை தொடரும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post மேம்பால கட்டுமானப்பணிக்காக மதுரை ஏ.வி. மேம்பாலம் மூடல் appeared first on Dinakaran.