சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்றநிலையில், வட மாநிலங்களில் அதிகனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக குஜராத் மற்றும் அதன் வட மேற்கு பகுதியில் அதிகனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று கேரளா வழியாக தரைப்பகுதிக்குள் நுழைகின்றது. அதன் காரணமாக கோவை மாவட்டம் நீலகிரி மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இது விர வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்று சுழற்சியாலும் வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர், கோவை, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் நேற்று மாலையில் தொடங்கி இரவு வரை மழை பெய்தது. இதற்கிடையே, நாகப்பட்டினம், திருச்சி, புதுச்சேரி, காரைக்கால், மற்றும் திருநெல்வேலி, ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் நேற்று இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும். இதே நிலை 12ம் தேதி வரை நீடிக்கும். மேலும், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் அதிகரித்து காணப்படும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரியாக இருக்கும். அதன் தொடர்ச்சியாக தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும்.
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடலின் அனேக பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகள், வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 60கிமீ வேகத்திலும் வீசும் எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
The post மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு வட மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.