புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முறைகேடான முறையில் ஆசிரியர் நியமனங்கள் நடந்திருப்பதால் இது மோசடிக்குச் சமம் என்று தெரிவித்தது. நீதிபதிகள் கூறுகையில், “முறைகேடாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிடுவதற்கு சரியான காரணம் எதையும் நாங்கள் இதில் காணவில்லை. பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டிருப்பதால் இது ஒரு மோசடியாகும்.” என்று தெரிவித்தது.