சென்னை: விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கும் திரவுபதி அம்மன் கோயிலில் அனைத்து தரப்பு மக்களும் வழிபட அனுமதித்ததை தொடர்ந்து, சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு தரப்பினர் கோயில் வழிபாட்டை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். சாதி ஆதிக்க எண்ணத்துடன், கோயிலை புறக்கணிக்க தூண்டும் சக்திகளை மக்கள் ஒன்றுபட்டு நின்று ஒதுக்கித்தள்ள வேண்டுமென சிபிஎம் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் பழமையான திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2023-ம் ஆண்டு பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதற்கு முயற்சித்த போது, அதற்கு எதிராக சாதி ஆதிக்க சக்திகளின் தூண்டுதலால் வன்முறை நடைபெற்றது. இந்த நிலைமையை மாற்றியமைத்து, அனைத்து தரப்பினரும் கோயிலில் வழிபாடு நடத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென 22 மாதங்களாகவே பலகட்ட போராட்டங்களும், பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்தன. நீதிமன்றத்திலும் வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது.