விழுப்புரம்: மேல்மலையனூர் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான விழா வருகிற 26ம் தேதி அதாவது நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையடுத்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா வருகிற மார்ச் 4ம் தேதி நடைபெறவுள்ளது. இத்திருத்தேர் உற்சவத்தையொட்டி, மார்ச் 4ம் தேதி ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேற்படி தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும், மேலும் மாணவர்களுக்கு 4ம் தேதி பள்ளியில் இறுதித் தேர்வுகள் நடைபெறும் என நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும் எனவும், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மார்ச் 4ம் தேதிக்கு பதிலாக மார்ச் 15ம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்தூல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.
The post மேல்மலையனூர் தேரோட்டம்.. விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!! appeared first on Dinakaran.