சென்னை: ராஜிவ் காந்தி சாலையில் மேற்கொள்ளப்படும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மே மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட திட்டம் 3 வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில், 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2ம் கட்ட திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலம் கையகப்படும் பணிகள் இன்னும் 4 மாதங்களில் முழுமையாக முடிவடையும் என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் நிலம் கையப்படுத்தும் பணி கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் 2ம் கட்ட திட்டத்தில் மேற்கொள்ளப்படும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மே மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும். குறிப்பாக ராஜிவ் காந்தி சாலையில் மேற்கொள்ளப்படும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான நிலம் கையப்படுத்தும் பணிகள் கடைசி கட்டத்தில் உள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 112 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் மற்றும் உள்கட்டமைப்பிற்காக 116 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இந்த சாலையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்பிற்கு 116.24 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. அதில் 114.22 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 2.02 ஹெக்டேர் நிலம் மே மாதத்திற்குள் முழுமையாக கையகப்படுத்தப்படும். அதன்படி தற்போது வரை 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நில பரப்பு சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி சிப்காட் இடையேயான பெரும்பாலான பகுதிகளில் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
The post மே மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும் ஓ.எம்.ஆரில் மெட்ரோ பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 99% நிறைவு appeared first on Dinakaran.