புதுடெல்லி: நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளில் அந்தந்த மாநில ஆளுங்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. மேற்கு வங்கத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸும், கர்நாடகாவில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
நாடு முழுவதும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டன. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அசாமில் 5, பிஹார், பஞ்சாபில் தலா 4, கர்நாடகாவில் 3, கேரளா, மத்தியப் பிரதேசம், சிக்கிமில் தலா 2 தொகுதிகள், குஜராத், உத்தராகண்ட், மேகாலயா, சத்தீஸ்கரில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.