சென்னை: இந்தி எதிர்ப்பு போரில் சிறை சென்று உயிர் நீத்த தாளமுத்து மற்றும் நடராசனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த 1938ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி தொடங்கிய மொழிப்போர் ஒன்றரை ஆண்டுக்காலம் தொடர்ந்து நடந்தது. இதில் மாணவர்கள் பலரும் பங்கு கொண்டனர். பல்லாயிரம் பேர் சிறை சென்றனர். சென்னை அடையார், தியாசபிகல் பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சென்னை, பெரம்பூர் பண்ணைக்கார ஆண்டியப்பன் தெருவில் வசித்துவந்த லட்சுமணன்-அம்மாக்கண்ணு இணையருக்கு 1919ம் ஆண்டு பிறந்த நடராசன் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் சிறையில் நோயால் பல நாட்கள் அவதிப்பட்ட அவர்,10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் 1939ம் ஆண்டு ஜன.15ம் தேதி தமிழுக்காக தன்னை முதற்பலியாக்கி கொண்டார். குமாரராஜா முத்தையா செட்டியார் விருப்பப்படி மருத்துவமனையிலிருந்து தன்னுடைய உடல் மேல் கறுப்புக் கொடி போர்த்தி பெரும் ஊர்வலமாக நடராசனின் பூதவுடல் எடுத்து செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் அண்ணா, தர்மாம்பாள், அ. பொன்னம்பலம், கு.மு.அண்ணல் தங்கோ. ஆல்பர்ட் ஜேசுதாசன், நாராயணி அம்மையார் முதலானோர் புகழுரையாற்றினர். நடராசனின் இழப்பு, மேலும் பலரையும் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தது.
பள்ளிகளில் கட்டாய இந்திக்கு எதிரான மொழி போராட்டத்தில் உயிர் நீத்த நடராசனுக்கு அடுத்து, இரண்டு மாதங்களில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த வேல்முருகன்-மீனாட்சி இணையருக்கு பிறந்த தாளமுத்து என்ற இளைஞரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்னின்று மறியல் செய்ததற்காக 6 மாத கடுங்காவல் பெற்று சிறைப்பட்ட 3 வாரங்களுக்குள் கடந்த 1939ம் ஆண்டு மார்ச்.11ம் தேதி உயிரிழந்தார். மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த நடராசன் – தாளமுத்து இருவரும் தமிழுணர்வு கொண்டோரின் மனத்தில் நீங்கா இடம் பெற்று இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள்.
அந்தவகையில், இந்தி எதிர்ப்பு போரில் சிறை சென்று உயிர் நீத்த தோழர்கள் நடராசன் – தாளமுத்து ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் நினைவிடத்தை சென்னை, மூலக்கொத்தளத்தில் பெரியார் திறந்து வைத்தார்.இந்த நினைவிடத்தினை பொலிவேற்றம் செய்திடவும், ஜனவரி 25 தினத்தை தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள் என்னும் பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்தது. அதன்படி, இன்று பொலிவேற்றம் செய்யப்பட்ட நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் உருவப் படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரவணக்கம் செய்தார். மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த நடராசன் – தாளமுத்து இருவரும் தமிழுணர்வு கொண்டோரின் மனத்தில் நீங்கா இடம் பெற்று இன்றும் நினைவு கூரப்படுகிறார்கள்.
The post “மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம், வீர வணக்கம்” : தாளமுத்து – நடராசன் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.