மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு பரங்கிப்பேட்டையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், மணிமண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள ராஜேந்திரனின் சமாதிக்கு அருகிலுள்ள இடத்தை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்திருப்பது பரபரப்பான செய்தியாகி இருக்கிறது.
1965-ல் மத்திய அரசின், இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்ற சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் தன்னெழுச்சியான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அப்படி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அடக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராஜேந்திரன் என்ற மாணவர் பலியானார். சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்த ராஜேந்திரனின் உடல் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள ரங்கப்பிள்ளை மண்டபத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.