சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பாக புளியந்தோப்பு கே.பி.பார்க் ஹவுசிங் போர்டு மற்றும் சூளை பகுதிகளில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் நேற்று காலை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினார். அப்போது, மேயர் பிரியா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: சிலர் இங்கு நிழலோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் நிஜத்தோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம். அவர்களது யுத்தத்திற்கும், திமுகவின் யுத்தத்திற்கும் பல மாறுபாடுகள், வேறுபாடுகள் உள்ளது.
தமிழில் அர்ச்சனை செய்யும்போது அர்ச்சனை சீட்டுக்கான கட்டணத்தில் 60 சதவீதம் ஈட்டுத்தொகை வழங்கிக் கொண்டிருக்கிறோம். முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு 13 போற்றி புத்தகங்களை வெளியிட்டார். ஒவ்வொரு கோயில்களிலும் அன்னை தமிழ் அர்ச்சனை நடைபெறும் என்றும் அதற்கு உண்டான அர்ச்சகர் பெயரும் அர்ச்சகரின் கைபேசியின் எண்களும் திருக்கோயில்களின் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ், தேவாரம் என்றாலும் தமிழ், திருவாசகம் என்றாலும் தமிழ், அர்ச்சனை என்றாலும் தமிழ்.
தமிழை உலகமெங்கும் பரவச் செய்யும் முதுகெலும்பு உள்ள முதலமைச்சர் எங்கள் முதலமைச்சர். எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஒரு மொழியை திணிக்கின்ற போது தான் எதிர்த்து நிற்கிறோம். எங்கள் தமிழ்மொழி பல்லாயிரம் நெடுங்கால பன்மையான தொன்மையான மொழி. தமிழுக்கும் தமிழர்க்கும் இடர் என்றால், தமிழுக்கு தீங்கு என்றால், தமிழுக்கு இன்னல் விளைவித்தால், உயிர் என்றாலும் களத்தில் முன் நின்று கொடுப்பதற்கு தயார் தயார் தயார் என முதல்வர் அறிவித்திருக்கிறார். அவர் வழியில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான திமுக தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் அணிவகுத்து நிற்கிறார்கள். 2026ல் இதை திணிப்பவர்கள் மீது மக்கள் அந்த வெறுப்பை காட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post மொழியை திணிப்பவர்கள் மீது 2026 தேர்தலில் மக்கள் வெறுப்பை காட்டுவார்கள்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.