புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா பெற்றுள்ள வளர்ச்சி இணையற்றது என்றும், இதனால் மக்களின் விருப்பங்கள் அதிகரித்துள்ளன என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
பிஹார் முன்னாள் முதல்வரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான கர்பூரி தாக்கூரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜக்தீப் தன்கர், "கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்ட வளர்ச்சி ஈடு இணையற்றது. நாம் ஏற்கனவே ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம். இன்னும் ஐந்து ஆண்டுகளில், மூன்றாவது இடத்தைப் பிடிப்போம். வளர்ச்சி அடைந்த இந்தியா ஒரு கனவு அல்ல. சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடும் 2047 ஆம் ஆண்டுக்குள் அது நனவாகும். பாரதம் விஸ்வ குருவாக மாறும்.