போபால்: மத்தியப் பிரதேசத்தில் 17 புனித தலங்களில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ள நிலையில், உஜ்ஜைன் கோயில் 'மது பிரசாத'த்துக்கு தடை இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மகேஷ்வர் என்ற நகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாநிலத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது என்றும், முதற்கட்டமாக 17 புனித தலங்களில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் கூறினார். உஜ்ஜைன் மாநகராட்சி, டாடியா, மைஹார், மண்டலா, முல்தாய், பாண்டா மற்றும் மண்ட்சௌர் ஆகிய ஆறு நகராட்சிகள், அமர்கண்டக், ஓம்காரேஷ்வர், மகேஷ்வர், மண்டலேஷ்வர், ஓர்ச்சா, சித்ரகூட் ஆகிய ஆறு நகர பஞ்சாயத்துகள் மற்றும் நான்கு கிராம பஞ்சாயத்துகள் என 17 புனித தலங்களில் மதுவிலக்கு முதற்கட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது.