புதுடெல்லி: யமுனை நீரின் தரம் குறித்த சர்ச்சைக்குரிய ‘விஷம் கலப்பு’ என்ற கருத்து குறித்த தனது விளக்கத்தை டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் ஆணையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சமர்ப்பித்தார். அரவிந்த் கேஜ்ரிவாலுடன் டெல்லி முதல்வர் அதிஷி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இருந்தனர். தனது கருத்து குறித்து வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் கடந்த வாரத்தில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அரவிந்த் கேஜ்ரிவால் தனது விளக்கத்தில், "எனது கருத்துக்கள் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு வழங்கப்படும் நீரில் ஆபத்தான அளவில் அமோனியா கலந்திருப்பதுடன் மட்டுமே தொடர்புடையது. விஷம் கலந்தது என்ற எனது முந்தைய கருத்துக்கள் தண்ணீரில் அமோனியாவின் அளவு அதிகரிப்பதை குறித்து மட்டுமே சொல்லப்பட்டது. இந்தச் சுற்றுச்சூழல் நெருக்கடியைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் அதற்கு இல்லை. தண்ணீரில் உள்ள அமோனியா அளவு ஜனவரி மாதத்தில், ஒரு லட்சத்தில் 7 பிபிஎம் என்ற அபாய அளவை எட்டியுள்ளது. இது பொதுசுகாதாரத்துக்கு மிகவும் அச்சுறுத்தலானது.