சென்னை: யுஜிசி தன்னாட்சி அமைப்பை பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகளை நசுக்குவதை ஏற்க முடியாது. ஒன்றிய அரசு உடனடியாக யுஜிசி விதிமுறைகள் திருத்த வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பல்கலைக்கழக மானிய குழு – யுஜிசி விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு வரைவு அறிக்கை ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய வரைவு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறார். 2018-ஆம் ஆண்டின் “பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி பணியாளர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரத்தை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்” என்ற விதிமுறைகளை திருத்தம் செய்து, “பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி பணியாளர்களை நியமித்தல் மற்றும் பதவி உயர்வு அளிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் (2025) விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்” என்ற வரைவை உருவாக்கியுள்ளது.