புதுக்கோட்டை மாவட்டம் செங்கீரை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி அபிராமிக்கு, சமீபத்தில் யூடியூப் காணொலியைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராஜேந்திரனும் அவரது தாயாரும் சேர்ந்து யூடியூப் காணொலி உதவியுடன் வீட்டில் பிரசவம் பார்த்தபோது பிறந்த குழந்தை சிறிது நேரத்தில் இறந்துள்ளது. அபிராமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரனுக்கு அலோபதி மருத்துவ முறை மீது நம்பிக்கை இல்லாத
தால் அவர் அப்படி செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான எதிர்மறை கருத்துகள் யூடியூப், வாட்ஸ்ஆப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற காணொலிகளை பார்க்கும் சிலர், முகம் தெரியாதவர்கள் சொல்லும் கருத்துகளை அப்படியே நம்பி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது போன்ற பிற்போக்கான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பிரசவத்தின்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காகவும், தாய்-சேய் நலன் காக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. சுகாதாரத் துறை பணியாளர்களின் தன்னலமற்ற உழைப்பின் விளைவாக தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 13 என்ற அளவில் இருந்து, 8.2 ஆக கடந்த ஆண்டு குறைந்துள்ளது. தேசிய சராசரி 25 என்ற அளவில் உள்ள நிலையிலும், தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. பெண்கள் கருவுற்றது முதல் பிரசவம் நடைபெற்று குழந்தைகள் வளரும் வரை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் வாயிலாக கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தொடர் சிகிச்சை, ஊட்டச்சத்து, தடுப்பூசி என அனைத்து வசதிகளையும் அரசு இலவசமாக ஏற்படுத்தி தந்துள்ளது. இவ்வளவு செயல்பாடுகளுக்கு மத்தியிலும் ராஜேந்திரன் போன்ற பிற்போக்கான சிந்தனை உள்ளவர்களால் அரசின் முயற்சிகள் வீணாகும் நிலை ஏற்படுகிறது.