கோபி: யூடியூப் பார்த்து வீட்டிலேயே மாணவிக்கு பிரசவம் பார்த்த வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோபி கச்சேரிமேடு சீதாம்மாள் காலனியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருந்து சுப்ரீத் (20) என்பவர் தனது தாய் மற்றும் மனைவி என்று கூறிக்கொண்டு இளம்பெண் ஒருவருடன் வாடகை வீட்டிற்கு குடி வந்தார். சுப்ரீத், ஆக்குபேஷனல் தெரபி வேலை செய்து வருவதாக கூறி உள்ளார்.
சில நாட்களுக்கு பிறகு அவரது தாய் எனக்கூறப்பட்டவர் அவினாசி சென்ற பிறகு சுப்ரீத் மற்றும் அவரது மனைவி எனக்கூறப்பட்ட 19 வயது இளம்பெண்ணுடன் வீட்டில் இருந்து உள்ளனர். அந்த இளம்பெண் கோவையில் விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், தினமும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, சுப்ரீத், கல்லூரி மாணவியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், அந்த இளம்பெண்ணிற்கு நேற்று முன்தினம் காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சுப்ரீத் வீட்டிலேயே யூ டியூப் பார்த்து பிரசவம் பார்த்து உள்ளார். அதில், மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மாணவிக்கு ரத்த போக்கு அதிகரிக்கவே, உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த தகவல் அறிந்த கோபி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பொன்மணி மற்றும் செவிலியர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர், வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, குழந்தையின் தொப்புள்கொடி மட்டும் ஒரு பிளாஸ்டிக் கவரில் இருப்பதை கண்டு அதை பறிமுதல் செய்தனர். மாணவியின் பெற்றோர் கோபி அருகே உள்ள மொடச்சூரில் வசித்து வருவது தெரியவந்தது.
அவர்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர், குழந்தையுடன் இருந்த மகளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த வாலிபர் உண்மையிலேயே மாணவியின் கணவரா என்பது குறித்து விசாரணை நடத்திய போது மாணவி உடல்நிலை சரியில்லாததால் ஒருவாரம் கழித்து விசாரணை துவக்க சுகாதார துறையினர் முடிவு செய்துள்ளனர்.
The post யூடியூப் பார்த்து வீட்டிலேயே மாணவிக்கு வாலிபர் பிரசவம் appeared first on Dinakaran.