கோவை: கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன புகையால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, ஆலையை பொதுமக்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டில் சத்தியமூர்த்தி நகர் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புக்கு அருகே துணிகளுக்கு சாயம் ஏற்றும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் புகை, இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தன. அதாவது, தொழி்ற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன புகை காற்றில் கலந்து, கடும் துர்நாற்றத்தை உருவாக்குவதோடு, சத்தியமூர்த்தி நகர் மற்றும் தொழிற்சாலையை சுற்றி வசிக்கும் மக்களின் உடல்நலனுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.